சந்தன மென்னிருபாதம் விலங்கிட செந்தமிழ் ஈழமகள் - அவள்
சொந்தமண் மீதினில் நொந்துகிடந்திட நெஞ்சம் குமுறியவர்
எங்களின் விடுதலை கண்டிட எண்ணியே செங்களமாடியவர் - தம்
சிந்தனைமீது சுதந்திரம் ஒன்றையே தன்னுயிர் கொண்டவராம்
செந்தமிழீழம் மலர்ந்திட என்றுமே சீறியெழுந்தவராம் - ஒரு
சிந்தனைமீது சுதந்திர வாழ்வென எண்ணி நடந்தவராம்
எந்த நிலைதனும் வந்திடினும் அதை வென்று களித்தவராம் - ஒரு
சங்கர் எனும் புயல்கண்டு நடுங்கிய தன்றுஎதிர் படையாம்
நீலஅலை யடித்தாடும் கடல்தனில் நிமிர்ந்தே நடந்திடவே -ஒரு
ஆழஅலைகடல் நீந்தியழித்திடும் படைகள் ஆக்கியவர்
காலை ஒளிர் கதிரான தலைவனாம் காவலன் ஈழமகன் - அவர்
கண்டபெருந்துணை சங்கர்எனும் பெருவீர மறத் துணைவன்
எந்தையும் தாயும் இருந்த நிலந்தனில் நிலவினில் மகிழ்ந்தாட -அங்கு
சொந்தமெனும் எழில்பொங்கும் மனத்துடன் நின்ற சிறுவர்கள் நாம்
கெந்தி நடந்து விழுந்து புரண்ட எம்மண்ணின் விடுதலையை - இவர்
தந்துஎம் விடிவினை காண விளைந்திடக் காலம் பிரித்ததய்யா
நின்றவர் வந்தவர் எத்தனை நாடுகள் நிறுத்திடு போரை என்றார் - படை
பந்தெனவே தலைகொய்து உருட்டிட பார்த்தே கிடப்பதென்ன
சந்திதனில் நிலமெங்கும் மரந்தனில் சடுதியில் பேயெழுந்து - தினம்
எந்தமிழ் அன்னையர் பிள்ளைகள் கொன்றிட ஏங்கி அழுகின்றோம்
சுட்டவன் சுட்டேஅழித்திட பெண்களின் கைகளைக் கட்டிவைத்தான்
திட்டமிட்டே அதன்முன்னர் நம்வீரரை தேசங்கள் கட்டிவைத்தார்
சட்டமெனத் தடைஇட்டு எதிர்படை வெட்டிட உதவியவர்
செத்து ஒழிந்திட கண்டும் இரங்கியே கட்டுஅவிழ்க்கவில்லை
எத்தனை வீரம் படைத்தும் எமதிடை இத்தனைஅழிவுகளோ
செத்துமடிந்திட இத்தனை தானென எண்ணும்நிலை யிழந்தோம்
இத்துணை வீரரே எங்கள் துயர் கண்டும் ஏனோ உறங்குகிறீர்
சற்று எழுந்தெம துயிர்களைக் காத்திட உயர்ந்திட வாரீரோ
0 comments:
Post a Comment